புதுடில்லி: மேற்குவங்க மாநில கவர்னராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மேற்குவங்க கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்ததாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் சூழ்நிலை அதிக பரபரப்பாக உள்ளது. இந்நிலையில், அந்த மாநிலத்தின் கவர்னராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் திடீரென தனது பதவியை விலகியுள்ளார். தற்போது டெல்லியில் இருக்கும் அவர், தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்குவங்கத்தின் 21வது கவர்னராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி நியமிக்கப்பட்ட ஆனந்த போஸ், சுமார் மூன்றரை ஆண்டுகள் அந்த பதவியில் பணியாற்றியுள்ளார். 1977 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தனது பணியை தொடங்கிய அவர், பல முக்கிய நிர்வாக பொறுப்புகளிலும் பணியாற்றியுள்ளார்.
தனது ராஜினாமாவை உறுதி செய்துள்ள ஆனந்த போஸ், கவர்னர் பதவியில் போதுமான காலம் பணியாற்றியதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், அவர் மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இடையே ஆரம்ப காலத்திலிருந்தே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.
இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிக்கையில், ஆனந்த போஸ் திடீரென ராஜினாமா செய்தது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். அவரது ராஜினாமாவுக்கான உண்மையான காரணம் இதுவரை வெளிவரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு சில அரசியல் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் கவர்னருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து அழுத்தம் இருந்திருக்கலாம் என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மேற்குவங்க கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதுபற்றி தன்னிடம் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உணர்வுகளை பாதிப்பதோடு கூட்டாட்சி அமைப்பின் அடித்தளத்தையும் பாதிக்கும் என்றும் மம்தா கூறியுள்ளார். மத்திய அரசு கூட்டாட்சி கொள்கைகளை மதித்து ஜனநாயக மரபுகளை காக்க வேண்டும் என்றும் மாநிலங்களின் கண்ணியத்தை பாதிக்கும் ஒருதலைப்பட்ச முடிவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில் லடாக் துணை நிலை ஆளுநராக இருந்த கவிந்தர் குப்தாவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
