சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (தேஜ கூட்டணி) மீண்டும் அமமுக இணைந்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
கூட்டணி நிலைப்பாடு குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இது அமமுகக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே நல்லதொரு காலத்தின் தொடக்கம் என தெரிவித்தார். மக்கள் விரும்பும் நல்லாட்சியை உருவாக்கும் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பதற்காகவே கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அவர் கூறினார்.
அதிமுகவுடன் உள்ள மோதல் பங்காளிச் சண்டை மட்டுமே என குறிப்பிட்ட அவர், பழைய விரோதங்களை நினைத்து கட்சி நலனையும், தமிழக நலனையும் பின்னுக்கு தள்ளக்கூடாது என்றார். ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்ற அடையாளத்தில் அனைவரும் ஒன்றிணைந்து, மீண்டும் நல்லாட்சியை அமைப்பதே தங்களின் நோக்கம் என்றும் டிடிவி தினகரன் விளக்கினார்.
இதனிடையே, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தடைந்தார். அவரது முன்னிலையில் பாஜ–அதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில், சென்னை நட்சத்திர ஹோட்டலில் டிடிவி தினகரன் பியூஷ் கோயலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருதரப்பினரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
