புதுடில்லி: ஒரே தவறை தொடர்ந்து செய்து வரும் காங்கிரஸ் எம்பி ராகுல், பார்லிமென்டை விட தன்னை உயர்ந்தவராக நினைக்கிறார். அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவனே எழுதியதாக கூறப்படும், இன்னும் வெளியிடப்படாத புத்தகத்தில் உள்ள தகவல்களை லோக்சபாவில் மேற்கோள் காட்ட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முயன்றதை தொடர்ந்து, அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதன் காரணமாக லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது:
தேச பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான விஷயம். தேச விரோத சக்திகளின் மொழியில் பேசிக் கொண்டு நாட்டின் பாதுகாப்பில் விளையாடக் கூடாது. தேச பாதுகாப்பை அரசியல் ஆயுதமாக மாற்றக்கூடாது. பார்லிமென்டில் அவதூறு பரப்பும் கருவியாக அதனை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் விதிமுறைகளின்படியே பார்லிமென்ட் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். விதிகளுக்கு உட்பட்டு தான் பேச வேண்டும். சபாநாயகருக்கு யாரும் சவால் விடுக்கக் கூடாது.
ராகுல் தொடர்ந்து ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்து வருகிறார். சீன எல்லை விவகாரம் குறித்து அவர் பேசுகிறார். 1959 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் சீனா ஆக்கிரமித்த நிலங்களை காங்கிரஸ் திரும்பப் பெற்றதா என்ற கேள்வியும் எழுகிறது.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு அனைத்தும் விதிகளின்படியே செயல்படும். ஆனால் ராகுல் எந்த விதிமுறைகளையும் பின்பற்றவில்லை. பார்லிமென்டை விட தன்னை உயர்ந்தவர் என நினைக்கிறார். அதனால், அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
