துபாய்: ஈரான் ஏவிய ஏவுகணைகள் அமீரக வான்வெளியில் இடைமறிக்கப்பட்டதால், துபாய் மற்றும் அபுதாபி பகுதிகளில் பலத்த வெடிச்சத்தம் கேட்டது. இந்த சம்பவத்தில் நால்வர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வான் பாதுகாப்பு அமைப்பு தக்க நேரத்தில் செயல்பட்டதால் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் விமான நிலைய சேவைகள் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன.
பாம் ஜுமேரா பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு பல ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. சம்பவத்துக்குப் பின்னர் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதில் நால்வர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவசர மீட்புக் குழுக்கள் உடனடியாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக துபாய் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
துபாய் அரசின் ஊடக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு முதன்மை எனவும், பொதுமக்கள் அமைதியாக இருந்து அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் சரிபார்க்கப்படாத வீடியோக்கள் மற்றும் தகவல்களை பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில சமூக வலைத்தளங்களில் பாம் ஜுமேரா மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள ஓர் ஹோட்டல் வளாகத்தில் தீப்பற்றிய காட்சிகள் பகிரப்பட்டு வருகின்றன. சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை நடைபெற்று வருகிறது.
