துபாய்: துபாயில் இருந்து உலகின் பல நகரங்களுக்கு இன்று மொத்தம் 45 விமானங்களை இயக்க உள்ளதாக எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை ‘மான்செஸ்டர் ஈவினிங் நியூஸ்’ வெளியிட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், அந்தப் பகுதியில் வான்வெளி மூடப்பட்டதால் வளைகுடா நாடுகளில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பலரும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில், இன்று பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் சில விமான சேவைகள் துபாயில் இருந்து இயக்கப்படும் என்று எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வான்வெளி மூடப்பட்டிருப்பதால் துபாயில் இருந்து புறப்படும் மற்றும் துபாய் வரும் விமானங்கள் 4ம் தேதி இரவு 11:59 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் துபாயில் சிக்கியுள்ள பயணிகளை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்புவதற்காக குறைந்த எண்ணிக்கையிலான சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், எமிரேட்ஸ் நிறுவனத்திடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்காமல் இருந்தாலும் அல்லது உறுதி செய்யப்பட்ட டிக்கெட் இல்லாதவர்களும் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துபாய் நேரப்படி காலை 6:30 மணிக்கு துபாயில் இருந்து பல நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.
இந்த சேவைகள் சென்னை, மும்பை (3 விமானங்கள்), டெல்லி (2 விமானங்கள்), பெங்களூரு (2 விமானங்கள்), ஐதராபாத், பாரிஸ் (பிரான்ஸ்), லண்டன் ஹித்ரு (2 விமானங்கள்), மாஸ்கோ (ரஷ்யா), கேப்டவுன் (தென் ஆப்ரிக்கா), பர்மிங்ஹம் (பிரிட்டன்), சாவ்பாலோ (பிரேசில்), டா நாங் (வியட்நாம்), பிராங்பர்ட் (ஜெர்மனி), ஜெட்டா (சவுதி – 2 விமானங்கள்), கெய்ரோ (எகிப்து), மொரிஷியஸ், ஹாங்காங் (சீனா), குவாங்சு (சீனா), கொழும்பு (இலங்கை), ஜோஹன்னஸ்பெர்க் (தென் ஆப்ரிக்கா), லிஸ்பன் (போர்ச்சுகல்), எடின்பர்க் (ஸ்காட்லாந்து), முனிச் (ஜெர்மனி), செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் (ரஷ்யா), மாஸ்கோ, லண்டன் காட்விக் (பிரிட்டன்), மணிலா (பிலிப்பைன்ஸ்), சிங்கப்பூர், சிட்னி (ஆஸ்திரேலியா), மிலன் (இத்தாலி), மாலே (மாலத்தீவு), ஹனோய் (வியட்நாம்), தைபே (தைவான்), ஆம்ஸ்டர்டம் (நெதர்லாந்து), லண்டன் எல்எச்ஆர், மான்செஸ்டர் (பிரிட்டன்) மற்றும் டசல்டோர்ப் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
