தி.மு.க. நிறைவேற்றாத வாக்குறுதிகள்: மா.கம்யூ. மாநாட்டில் பட்டியல்
தர்மபுரி: கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தர்மபுரி மாவட்டத்திற்கென அறிவிக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பட்டியலிடப்பட்டது.
அந்த தேர்தலில், தி.மு.க., சார்பில் தர்மபுரி மாவட்டத்திற்காக 44 வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள சூழலில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதாக மாநாட்டில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தர்மபுரியிலிருந்து அரூர் வழியாக மொரப்பூருக்கு நான்கு வழிச்சாலை அமைத்தல் உள்ளிட்ட ஒரு சில திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில், மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் நிலையம் மற்றும் நவீன தொழிற்சாலை, செனாக்கல் நீர்ப்பாசனத் திட்டம், ஒகேனக்கல் உபரி நீரை ஏரி–குளங்களில் நிரப்புதல், செனாக்கல் தடுப்பணை, அரூரில் தொழிற்பேட்டை அமைத்தல், தீர்த்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றுலா தலமாக்குதல், பென்னாகரத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம், பாப்பாரப்பட்டி வேளாண் பயிற்சி பள்ளியை கல்லூரியாக தரம் உயர்த்துதல், தர்மபுரியில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை, மலைக்கிராமங்களுக்கு சாலை வசதி உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தி.மு.க., கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பென்னாகரம் மற்றும் அரூரில் நடைபெற்ற மாநாட்டில், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து விரிவாக பட்டியலிடப்பட்டது.
மாநாட்டில் பேசிய சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் மக்கள் நலன் சார்ந்த அரசியலை முன்னெடுத்து வருவதாகவும், அரூர் பகுதியில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படுவதற்கு கட்சியின் போராட்டங்களே காரணம் என்றும் தெரிவித்தார்.
மேலும், கட்சியின் மாவட்ட செயலாளர் சிசுபாலன் பேசுகையில், கடந்த தேர்தலில் தி.மு.க., அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்துவதற்காகவே இந்தக் கருத்துகளை முன்வைப்பதாகவும், கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்னைகளுக்காக போராடும் கட்சியாக மா.கம்யூ., செயல்படுகிறது என்றும் கூறினார்.
