சென்னை: தி.மு.க. கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
மதுரவாயலில் நடைபெற்ற ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசினார். ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்ததை குறிப்பிட்ட அவர், அதற்கு முதல்வர் ஸ்டாலின் கூறிய “பூஜ்யம்” குறித்த விமர்சனத்துக்கு பதிலளித்தார். தேர்தலில் தி.மு.க.க்கு பூஜ்யம், அ.தி.மு.க.க்கு ராஜ்யம் கிடைக்கும் என கூறினார்.
மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடைக்கால உதவித் தொகை அறிவிப்புகள் தேர்தல் அச்சத்தால் வெளியிடப்பட்டவை என விமர்சித்தார். அ.தி.மு.க. அறிவிப்பே மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்பது விரிசலை வெளிப்படுத்துகிறது என கூறிய அவர், கூட்டணியின் நிலைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்யாத விவகாரத்தையும் சுட்டிக்காட்டினார்.
அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களது கொள்கை அடிப்படையில் செயல்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
