தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதே ஒரே குறிக்கோள்: அண்ணாமலை
கோவை: தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதே பா.ஜ.வின் ஒரே நோக்கம் என்று, அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை நவஇந்தியா எஸ்.என்.ஆர். அரங்கில், கோவை மாநகர் மாவட்ட பா.ஜ. சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. வாஜ்பாயின் வாழ்க்கை, ஆட்சிக்கால சாதனைகள் குறித்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணாமலை, சமூகப்பணிகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ‘நல்லாட்சி விருதுகள்’ வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
சமீப காலமாக அரசு பேருந்துகள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன. அனைத்து அரசு பேருந்துகளையும் ஆய்வு செய்து தரச்சான்று வழங்குவது அவசியமாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வடிவம் குறித்து பின்னர் தெளிவாகும். அனைவரும் சரியான முடிவுகளை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டணி பெரும் வெற்றியை பெறுவதற்கான சாத்தியங்களை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.
தி.மு.க. ஆட்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிகபட்சமாக இன்னும் 100 நாட்களே அவர்கள் ஆட்சியில் இருப்பார்கள். பிரதமர் அனைத்து மதங்களின் பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறார். ஆனால், தமிழக முதல்வர் சில மதப் பண்டிகைகளுக்கு மட்டுமே வாழ்த்து கூறுகிறார். இதில் இருந்து யார் மத அரசியல் செய்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
தமிழக மக்கள் அனைத்தையும் கவனித்து வருகிறார்கள். தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதே பா.ஜ.வின் ஒற்றை இலக்கு. அதற்காக பூத் கமிட்டிகளை பலப்படுத்தியுள்ளோம். காவல்துறையினர் கடும் மனஅழுத்தத்தில் உள்ளனர். அந்த துறையிலும் சில தவறான செயல்களில் ஈடுபடும் நபர்கள் இருக்கின்றனர். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
