திருவனந்தபுரம்: ‘தி கேரளா ஸ்டோரி-2’ திரைப்படத்துக்கு தனி நீதிபதி விதித்த இடைக்கால தடையை, கேரள உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ரத்து செய்ததையடுத்து, படத்தை வெளியிடும் நடவடிக்கைகள் வேகமடைந்துள்ளன.
கேரளாவைச் சேர்ந்த நர்சிங் மாணவிகள் மதம் மாற்றப்பட்டு ஐ.எஸ். அமைப்பில் சேர்க்கப்படுவதாகக் கூறப்படும் கதையை அடிப்படையாகக் கொண்டு 2023ல் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளியானது. சர்ச்சைகளுக்கு இடையே அந்த படம் வெளியானது. தற்போது அதன் இரண்டாம் பாகம் ‘தி கேரளா ஸ்டோரி-2: கோஸ் பியாண்ட்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. காமாக்யா நாராயண்சிங் இயக்கியுள்ள இந்தப் படம் பல மொழிகளில் தயாராகியுள்ளது.
சமீபத்தில் வெளியான டிரெய்லரில் இடம்பெற்ற சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பட வெளியீட்டை நிறுத்த கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, 15 நாட்களுக்கு இடைக்கால தடை விதித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா மேல் முறையீடு செய்தார். விசாரணைக்கு எடுத்த டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து, படத்தை வெளியிட அனுமதி வழங்கியது. இதையடுத்து, படம் திரையரங்குகளில் வெளியாகும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
