சென்னை: இளைஞர்களிடையே திரைப்பட மோகம் அதிகரித்துள்ளதற்கு ஆட்சியாளர்களே காரணம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் எந்த மாற்றமும் இல்லை.
என்னுடன் யாரும் கூட்டணிக்கு வரமாட்டார்கள். ஓட்டுக்கு பணம் வழங்காத அரசியல் பண்பாட்டை ஏற்கும் கட்சிகள் இருந்தால் மட்டுமே கூட்டணி குறித்து சிந்திக்க முடியும். பணம் கொடுத்து பெறப்படும் வெற்றி என்பது இழிவான அரசியல் என்று அவர் கூறினார்.
த.வெ.க. தலைவர் விஜய் கரூருக்கு செல்லவில்லை என்றால் அங்கு இத்தனை கூட்டம் கூட இருக்காது; உயிரிழப்பும் ஏற்பட்டிருக்காது. தற்போது ‘கரூர் சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை’ என்று விஜய் கூறுவதை ஏற்க முடியாது.
அது தெரியாமல் நடந்திருந்தாலும், அதற்கு நானும் பொறுப்பாகிவிட்டேன் என்று மன்னிப்பு கேட்டிருந்தால் அந்த விவகாரம் முடிந்திருக்கும் என்று சீமான் தெரிவித்தார்.
இன்றைய இளைஞர்களிடையே அரசியல் அறிவை விட திரைப்பட மோகம் அதிகமாக இருப்பதற்கு ஆட்சியாளர்களே காரணம். கல்வி நிறுவனங்களில் அரசியல் பேச தடை விதித்துவிட்டு, சினிமா நட்சத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது சமூக சீர்கேட்டை உருவாக்குகிறது.
மேலும் மாநில உரிமை குறித்து பேசும் திமுக, அந்த உரிமையை பறித்த காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.
