திருப்பூர்: திருப்பூரில், கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டுவை கத்தியால் குத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் மாநகர போலீசார் நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு 7 மணியளவில், அப்பகுதிக்கு வந்த ஒருவர் பொதுமக்கள் மத்தியில் அநாகரிகமாக நடந்துகொண்டார்.
இதனை கவனித்த தெற்கு போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு ராமகிருஷ்ணன், அந்த நபரிடம் எச்சரித்து அங்கிருந்து செல்ல அறிவுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், போலீஸ் ஏட்டுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து குத்த முயன்றார்.
உடனே சாமர்த்தியமாக விலகிய போலீஸ் ஏட்டு, தன் பெல்ட்டை கழற்றி சுழற்றி தாக்குதலை தடுத்தார். அங்கு பாதுகாப்பில் இருந்த மற்ற போலீசார் விரைந்து வந்து அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில், சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த இளங்கோ (45) என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில், போலீசை தாக்க முயன்ற நபர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அவர் 2020 ஆம் ஆண்டு கலெக்டர் அலுவலகத்தில் வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் என்றும் கூறினார்.
