அவனியாபுரம்: திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், தி.மு.க. அரசு அதை நடைமுறைப்படுத்தவில்லை என மத்திய இணை அமைச்சர் முருகன் குற்றம் சாட்டினார்.
மதுரை மண்டேலா நகரில் மார்ச் 1ல் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட பின்னர் அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவை தி.மு.க. அரசு இன்றுவரை நிறைவேற்றவில்லை. மேலும், தீர்ப்பு வழங்கியதற்காக நீதிபதியை பதவிநீக்கம் செய்ய மனு அளித்திருப்பது அரசியல் நடவடிக்கை என விமர்சித்தார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்க உள்ளது என்பது தெளிவாக இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணியின் தலைவர் பழனிசாமி பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தமிழகம் மற்றும் டில்லி அணிகள் குறித்து முதல்வர் கருத்து தெரிவித்து வருகிறார். நாட்டின் முன்னேற்றத்திற்கும், மாநில வளர்ச்சிக்கும் இரட்டை இன்ஜின் அரசுதான் அவசியம் என அவர் கூறினார்.
பீகார், அரியானா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இரட்டை இன்ஜின் ஆட்சியால் வேகமான முன்னேற்றம் கண்டுள்ளன. தமிழகத்திலும் மக்கள் அதையே விரும்புகின்றனர்.
தி.மு.க.–தே.மு.தி.க. கூட்டணி குறித்து கேள்வி எழுப்பிய அவர், விஜயகாந்தின் அரசியல் நிலைப்பாட்டை நினைவுபடுத்தினார். அவரது கட்சி உருவாக்கப்பட்டதே தி.மு.க.க்கு எதிராக; வாழ்நாள் முழுவதும் அவர் அதே நிலைப்பாட்டில் இருந்தார் என குறிப்பிட்டார்.
