திருப்பரங்குன்றம் தீபத்தூண் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வோம்: அமைச்சர் ரகுபதி
சென்னை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, மாவட்ட கலெக்டர் மற்றும் 10க்கும் மேற்பட்ட நபர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் தமிழகத்தில் இதுவரை இல்லை.
தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் மேல்முறையீட்டில் கோரியது. ஆனால், இன்றைய தீர்ப்பில் பொதுமக்களுக்கு மட்டும் தடை விதித்து, மாவட்ட கலெக்டர் தலைமையில் சிலர் சென்று தீபம் ஏற்ற வேண்டும் என சட்டத்திற்கு புறம்பான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசும், ஹிந்து சமய அறநிலையத் துறையும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்ய உள்ளது.
பொதுவாக, ஒரு இடத்தில் ஏற்கனவே நடந்த மரபு அல்லது வழக்கத்தின் அடிப்படையில் மட்டுமே நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும். முன்பு தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எந்த காலகட்டத்திலும் இதுபோன்ற கோரிக்கை முன்வைக்கப்படவில்லை.
நீதித்துறையை களங்கப்படுத்தும் நோக்கம் எங்களிடம் இல்லை. ஆனால், சட்டத்திற்கு புறம்பான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதால், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட முழு உரிமை எங்களுக்கு உள்ளது. தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும்.
யாரோ ஒருவர் கோரிக்கை வைத்ததால் அனுமதி வழங்குவது முறையல்ல. இதுவரை இல்லாத ஒரு வழக்கத்தை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அறிமுகப்படுத்துவது உள்நோக்கம் கொண்டதாகவும், தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரானதாகவும் உள்ளது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
