திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலிக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை: திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயிலும், சிக்கந்தர் தர்காவும் அமைந்துள்ளன. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது என்றும், மலையில் அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் கடந்த ஜூன் 24ஆம் தேதி தீர்ப்பு வெளியான நிலையில், நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி மாறுபட்ட உத்தரவுகளை வழங்கினர். சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்க கோரிய மனுக்களை நீதிபதி நிஷா பானு தள்ளுபடி செய்தார். இதற்கு மாறாக, நீதிபதி ஸ்ரீமதி அந்த உத்தரவுக்கு முரண்பட்ட கருத்தை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. தனி நீதிபதி விஜயகுமார் இந்த வழக்கை விசாரித்து இன்று (அக்டோபர் 10) தீர்ப்பளித்தார்.
அப்போது, திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக சிவில் நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பை அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும், இஸ்லாமியர்கள் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி நிஷா பானுவின் உத்தரவையும் உறுதிப்படுத்தினார். அதேபோன்று, இந்த மலையை “திருப்பரங்குன்றம் மலை” என்றே அழைக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
