திருநெல்வேலி: சர்ச் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின் போது முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். மேலும் மூன்று பெண்கள் மயக்கமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மேல ஏறாந்தை கிராமத்தில் பெரும்பான்மையாக ஹிந்துக்கள் வசித்து வருகின்றனர். அங்கு கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒருவர் புதிய சி.எஸ்.ஐ. தேவாலயம் அமைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. வணிக வளாகம் கட்ட அனுமதி பெற்று அதை தேவாலயமாக மாற்ற முயன்றதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இந்த விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. தேவாலயம் கட்ட அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று மீண்டும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உச்சிமாகாளி அம்மன் கோவில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு கொண்டு செல்ல போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
போராட்டத்தில் கலந்து கொண்ட மணிவேல் (65) திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல முடியாததால் சிகிச்சை தாமதமானதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும், போராட்டத்தில் இருந்த நாகவள்ளி (50), செல்லத்தங்கம் (60), உமா (35) ஆகிய மூவர் மயக்கமடைந்தனர்.
இறந்தவரின் உடலை பெற்றுக் கொள்ள மறுத்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கைது செய்யப்பட்டு திசையன் வழியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் கிராமத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
