திருத்தணியில் தொடரும் வன்முறை: புடவை வியாபாரி மீது போதை கும்பல் தாக்குதல்
திருத்தணி: திருத்தணியில் ஒடிஷா வாலிபர் மீது கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் இன்னும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அதே பகுதியில் புடவை வியாபாரி ஒருவரை போதை ஆசாமிகள் தாக்கிய சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகே, கடந்த 27ம் தேதி, கஞ்சா போதையில் இருந்த நான்கு சிறுவர்கள், ஒடிஷாவைச் சேர்ந்த சுராஜ் (20) என்பவரை அரிவாளால் வெட்டி, அந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பினர். பதைபதைக்க வைக்கும் வகையில் இருந்த இந்த காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் போதைப்பொருட்களின் புகலிடமாக மாறி வருகிறது என அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட நான்கு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். காயமடைந்த சுராஜ் சிகிச்சை பெற்ற பின் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் ஓய்வதற்குள், திருத்தணி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. திருத்தணி நேரு நகரைச் சேர்ந்த ஜமால் (40) என்பவர், புடவை வியாபாரம் செய்து வருகிறார். ரயில் நிலையத்தில் நின்றிருந்த அவரை, அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் காரணமின்றி கைகளால் தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.
இதில் காயமடைந்த ஜமால், திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரித்த போது, “சிறுநீர் கழிக்க சென்றபோது திடீரென தாக்கினர்; ஏன் தாக்கினார்கள் என்பதே தெரியவில்லை” என அவர் கூறியுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக திருத்தணி போலீசாரும், ரயில்வே போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தொடர் சம்பவங்களை தொடர்ந்து, வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, காவல் நிலையம்தோறும் தனியாக எஸ்.ஐ., மற்றும் இரண்டு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள், வட மாநில தொழிலாளர்கள் தொடர்பான பதிவேடுகளையும் பராமரிப்பர் என கூறப்பட்டுள்ளது.
அரசியல் பிரதிநிதிகள் கருத்து
இந்த விவகாரம் தொடர்பாக, அண்ணாமலை கூறுகையில்,
“குற்றவாளிகளுக்கு ஊக்கம் தரப்படும் சூழல் தமிழகத்தில் உருவாகியுள்ளது. சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் அரசு தோல்வியடைந்துள்ளது. இன்னும் எத்தனை சுராஜ், ஜமால் பாதிக்கப்பட வேண்டும்?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,
“போதைப்பொருட்களை கட்டுப்படுத்தாததே இந்த தாக்குதல்களுக்கு காரணம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், தரமான கல்வியும் வழங்கப்படவில்லை. ஆளும் தகுதியை தி.மு.க., அரசு இழந்துவிட்டது” என விமர்சித்தார்.
