சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா என்ற கேள்விக்கு, அது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை தான் இறுதி முடிவு எடுக்கும் என, தமிழகம்–புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்குப் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் புதிதாக மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் செயல்பாடுகள் அடுத்த ஆறு மாதங்கள் கண்காணிக்கப்படும். திருப்திகரமாக செயல்படாதவர்கள் மாற்றப்படுவார்கள்.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விருப்ப மனு அளித்தவர்களிடம் விரைவில் நேர்காணல் நடத்தப்படும். அதன் பின்னர் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படும்.
திமுக கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளை அடிப்படையாக கொண்டு, அகில இந்திய கட்சி தலைமை தான் இறுதி முடிவை அறிவிக்கும்.
இவ்வாறு கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
