சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் திமுக தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
கடந்த தேர்தலில் முஸ்லிம் லீக்கிற்கு 3 தொகுதிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த முறை கடையநல்லூர், வாணியம்பாடி மற்றும் சிதம்பரம் தொகுதிகளில் போட்டியிட்ட அந்த கட்சி தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் லீக்கைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான ஒப்பந்தமும் இருதரப்பினராலும் கையெழுத்திடப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், கூட்டணி அமைப்புகள் மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
