சென்னை அரசு கலைக்கல்லூரி கேன்டீனில் பணியாற்றி வந்த 22 வயது இளம்பெண், மூன்று நபர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்பதை வெளிப்படையாக காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கூறிவந்தாலும், தினசரி வெளியாகும் குற்றச் செய்திகள் அந்தக் கூற்றை முற்றிலும் பொய்யாக்குவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்ற உண்மையை திமுக அரசு முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும்; அப்போதுதான் அதற்கான தீர்வுகளை உருவாக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்ததன் விளைவாக, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற குற்றங்கள் கட்டுக்கடங்காமல் பெருகி வருவதாகக் குறிப்பிட்டார். குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டிய நிலையில், தமிழகத்தில் குற்றவாளிகள் அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிலை இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதனால் குற்றவாளிகளுக்கு எந்த பயமும் இல்லாமல் போயுள்ளதாகவும், அச்சம் சாதாரண மக்களுக்கே மாறியுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலமாக மாறியுள்ளதாகவும், இந்த ஆட்சி விரைவில் முடியும் என்ற நம்பிக்கையே தற்போது மக்களுக்கு நிம்மதியை தரும் ஒரே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
