திமுக அகற்றப்பட வேண்டும்; விஜய் குறித்து எங்களுக்கு பிரச்சனை இல்லை – நயினார்
மதுரை: நடிகர் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் அவசியம் எங்களுக்கு இல்லை என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள திடலில், ஜனவரி 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநாடு நடைபெற உள்ள நிலையில், அதற்கான இடத்தை நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி 23ஆம் தேதி பிரதமர் மோடி வருகையின்போது, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். அந்த பொதுக்கூட்டம் சென்னை, திருச்சி அல்லது மதுரை ஆகிய இடங்களில் எதாவது ஒன்றில் நடைபெறும் என்றும், எந்த மாவட்டத்தில் நடத்துவது என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றும் கூறினார்.
மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறுமானால், பாண்டி கோயில் அம்மா திடலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அப்போது பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வருகை தர வாய்ப்பு இருப்பதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மேலும், விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் அவசியம் எங்களுக்கு இல்லை என்றும், கூட்டணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி, பியூஷ் கோயல், அமித் ஷா ஆகியோர் முடிவு செய்வார்கள் என்றும் கூறினார்.
அகற்றப்படணும்!
கூட்டணி ஆட்சி வேண்டும் என்று காங்கிரஸ் கூறுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், அவர்கள் செய்வதையெல்லாம் நாங்களும் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், தி.மு.க., அகற்றப்பட வேண்டும் என்பதே எங்களது ஒரே நோக்கம் என்றும் தெரிவித்தார்.
மேலும், கூட்டணி ஆட்சி வேண்டும் என்று பா.ஜ., கூறவில்லை என்றும், 56 தொகுதிகள் மற்றும் 3 அமைச்சர்கள் வேண்டும் என்று நாங்கள் கேட்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் வதந்தி என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
