தான்தோன்றித்தனமாக பேசுவோர் காங்கிரஸ் தொண்டர்கள் அல்ல: செல்வப்பெருந்தகை கடும் எச்சரிக்கை
சென்னை: கூட்டணி தொடர்பான விஷயங்களில் அரைவேக்காடாகவும் தான்தோன்றித்தனமாகவும் செயல்படுவோர் காங்கிரஸ் தொண்டர்கள் அல்ல என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கருத்தை மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். ஆனால், காங்கிரஸ் எந்தக் கட்சியிடமும் தனியாக கூட்டணி பேச்சு நடத்தவில்லை. தி.மு.க.,வுடன் தான் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார்.
பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட உரிமைகள் அனைவருக்கும் உள்ளன. ஆனால், எந்த விஷயத்தை எங்கு பேச வேண்டும் என்ற அரசியல் புரிதல் அவசியம். எல்லாவற்றையும் ஊடகங்களில் பேசினால், பின்னர் கூட்டணி கட்சிகள் எதற்காக என்ற கேள்வி எழும்.
எங்களுக்கு தேவையான விஷயங்களை கூட்டணி கட்சி தலைவர்களிடம் நாகரிகமான முறையில் பேசி பெறுவோம். தொகுதி விவகாரமாக இருந்தாலும், முக்கிய கூட்டணி கட்சியான தி.மு.க.,விடம் தான் பேச வேண்டும். ஊடகங்கள் கூடுதல் தொகுதிகளையோ, அதிகாரத்தையோ பெற்றுத் தரப் போவதில்லை.
டில்லி மேலிடம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தான் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. காங்கிரஸ் தொண்டர்கள் தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு, கூட்டணி வெற்றிக்காக உழைப்பவர்கள். தான்தோன்றித்தனமாக செயல்படுவோர் காங்கிரஸ் தொண்டர்கள் அல்ல.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவர் பிறரை ஊழல் குற்றச்சாட்டில் விமர்சிப்பது பொருத்தமற்றது. முதல்வர் மீது எனக்கு இருக்கும் ஒரே வருத்தம், பழனிசாமி மற்றும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காததே என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
🗓️ காங்கிரஸ் போராட்ட அறிவிப்பு
ஜனவரி 11 – தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பாதுகாக்க ஒரு நாள் உண்ணாவிரதம்
ஜனவரி 30 – வார்டு, வட்டார அளவில் உள்ளிருப்பு போராட்டம்
ஜனவரி 31 முதல் பிப்ரவரி 6 – கலெக்டர் அலுவலகங்கள் முன்பு போராட்டம்
பிப்ரவரி 7 முதல் 15 – கோரிக்கை பேரணிகள்
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா பங்கேற்கும் மாநாடு – தேதி, இடம் பின்னர் அறிவிப்பு
