சென்னையில், கோட்டூர்புரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் திட்டத்தின் கீழ் ரூ.30,724 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 1,800 குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை அமைச்சர்கள் அன்பரசன் மற்றும் சுப்பிரமணியன் ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என்று தெளிவுபடுத்தினார்.
தற்காலிக ஊழியர்களின் பணிக்காலம் ஆண்டுக்கு 11 மாதங்கள் மட்டுமே என்றும், ஒவ்வொரு ஆண்டும் ஒருநாள் இடைவெளி அளித்து மீண்டும் பணிக்காலம் புதுப்பிக்கப்படுவதாகவும் அவர் விளக்கினார். இவ்வகை பணியாளர்களை எந்த மாநில அரசும் நிரந்தரமாக்க முடியாது என்றும், அவ்வாறு செய்தால் நீதிமன்றங்கள் தலையிடும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதனை அறிந்திருந்தும் சிலர் திட்டமிட்டு போராட்டங்களை தூண்டுவதாகவும், முன்பும் இவ்வாறு செயல்பட்ட நபர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் சூழலில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் நடைபெறும் போராட்டங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும், போராட்டங்களை இழிவுபடுத்துவது தனது நோக்கம் அல்ல என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
முன்னதாக தொழிற்சங்க தலைவராக செயல்பட்ட அனுபவம் தனக்கு இருப்பதாக குறிப்பிட்ட அவர், தேசிய குற்ற ஆவண அறிக்கையின்படி இந்தியாவில் உள்ள 36 மாநிலங்களில் தமிழகத்தில் தான் குறைந்த அளவிலான குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
