சென்னை: இனவெறுப்பை உமிழும் பிரிவினைவாத இண்டி கூட்டணி எனக் குறிப்பிட்டு, அண்ணாமலைக்கு தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலத் தலைவருமான சகோதரர் அண்ணாமலை குறித்து, மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கொச்சையாக விமர்சனம் செய்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
மேலும், மலினமான வார்த்தைகளைப் பயன்படுத்தி, ஒட்டுமொத்த தமிழர்களையும் இழிவுபடுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார். வட மாநிலத்தவர்களை கொச்சைப்படுத்திப் பேசி, தி.மு.க., தலைவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இனவெறித் தீ, இன்று அவர்களது இண்டி கூட்டணியினராலேயே தமிழர்களை நோக்கி திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
‘தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்’ என்று போலியாக சூளுரைக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின், தற்போது தமிழர்களின் மாண்பைக் காக்க, இண்டி கூட்டணியினரை எதிர்த்து குரல் கொடுப்பாரா அல்லது மௌனம் சாதிப்பாரா என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
