தஞ்சாவூர்: கோவில்களில் இருந்து கடத்தப்பட்டு ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் இருப்பதாக கண்டறியப்பட்ட ஐந்து சுவாமி சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள், தொன்மையான பொருட்கள் மற்றும் கலைப்பொருட்களை மீட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. விசாரணையில் பல சிலைகள் வெளிநாட்டு அருங்காட்சியகங்கள் மற்றும் ஏல நிறுவனங்களில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கடுவன்குடி கைலாசநாதர் கோவிலுக்கு சேர்ந்த திரிசூல மங்கள காளி சிலை மற்றும் நந்தி சிலை, தஞ்சாவூர் மாவட்டம் மானம்பாடி நாகநாதசுவாமி கோவிலுக்கு சேர்ந்த ஆறு தலைகள் உடைய ஸ்கந்த கார்த்திகேயன் சிலை ஆகியவை ஆஸ்திரேலியாவின் கேன்பரா நகரில் உள்ள நேஷனல் கேலரியில் இருப்பது 2016ல் கண்டறியப்பட்டது.
அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் நாரீஸ்வரர் கோவிலில் இருந்து காணாமல் போன நாயனார், சுந்தரர் மற்றும் பரவை நாச்சியார் சிலைகள் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. மேலும் திருவாரூர் மாவட்டம் ஆலத்துார் விஸ்வநாதசுவாமி கோவிலில் இருந்து காணாமல் போன சோமாஸ்கந்தர் உள்ளிட்ட சிலைகள் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள நேஷனல் மியூசியம் ஆப் ஏசியன் ஆர்ட்டில் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த சிலைகளை பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் அடிப்படையில் மத்திய அரசிடம் ஒப்படைக்க தொடர்புடைய ஏல நிறுவனங்களும் அருங்காட்சியகங்களும் ஒப்புக்கொண்டுள்ளன. அச்சிலைகள் விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்காக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக் மற்றும் எஸ்.பி. சந்திரசேகரன் பாராட்டினர்.
