சென்னை: தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் பெற்று ஆல் ரவுண்டர் மாநிலமாக உயர்ந்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தமிழகம் தொடர்பான தனது கனவு தனிப்பட்ட கனவு அல்ல என்றும், அது முழு தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளையும் உள்ளடக்கிய கனவு என்றும் கூறினார்.
நூற்றாண்டுக்கு முன் தொடங்கிய திராவிட இயக்கத்தின் இலட்சியங்களை நோக்கி மேற்கொண்ட பயணத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திராவிட மாடல் ஆட்சியின் மூலம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக மக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை நேரடியாக காண்கிறார்கள் என்றும், அதனால் தான் திராவிட மாடல் ஆட்சிக்கு மக்களிடையே பெரும் ஆதரவு உருவாகியுள்ளது என்றும் கூறினார்.
மேலும் மத்திய அரசின் பல நெருக்கடிகளை சமாளித்தபோதும் தமிழகம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்றுள்ளதாகவும், இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சியை எட்டிய ஒரே மாநிலம் தமிழகம் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
புதிய தொழில் முதலீடுகள் மூலம் பல முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகளை அமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும், கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் மூன்று கோடி மக்கள் பயன் பெறுகின்றனர் என்றும் அவர் கூறினார்.
அதேபோல் நகரங்களில் பூங்காக்கள் அமைத்தல், இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்குதல் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளும் இதேபோல் மக்கள் நலனுக்காக தொடர்ந்து உழைப்போம் என்றும், சாதனைகள் இல்லாத காரணத்தால் பிரதமர் மோடி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் என்றும் முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
