சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த 19 வயது இளைஞர், வெள்ளிக்கிழமை காலை மூளைச்சாவு அடைந்தார். குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவரது இதயம் மற்றும் சிறுகுடல் தானமாக வழங்கப்பட்டது. இந்த இதயம், இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 33 வயது நோயாளிக்கு மாற்றுப் பொருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
தானமாகப் பெறப்பட்ட இதயத்தை மிகக் குறுகிய நேரத்தில் சென்னைக்கு கொண்டு செல்ல, தஞ்சாவூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் எடுத்துவரும் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது. ஹெலிகாப்டர் அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி. வைஷ்ணவக் கல்லூரி வளாகத்தில் தரையிறங்கியதும், அங்கிருந்து நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு இதயம் கொண்டு செல்லப்பட்டது.
இதற்காக சென்னை போலீசார் தடையற்ற போக்குவரத்து வழித்தடத்தை உருவாக்கி வழங்கினர். அதன் மூலம், ஹெலிகாப்டரில் இருந்து இறக்கப்பட்ட இதயம் இரண்டு நிமிடங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, இதய மாற்று அறுவை சிகிச்சைத் துறை இயக்குனர் கே.ஆர். பாலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழு, அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
இந்த சிகிச்சையின் மூலம், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இளைஞருக்கு புதிய வாழ்வு கிடைத்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
