கோல்கட்டா: வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியுள்ள எந்த வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது என்றும், தகுதி உள்ள அனைவரும் ஓட்டளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்றிருந்த அவர், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து இந்த கருத்தை தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் நேர்மையான மற்றும் அமைதியான தேர்தலை நடத்துவதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம். தகுதியுள்ள வாக்காளர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள். தகுதி உள்ள அனைவரும் வாக்களிக்க நிச்சயம் அனுமதிக்கப்படுவர்.
மேற்கு வங்க மக்கள் எப்போதும் அமைதி மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் மாநிலத்தில் நடைபெறும் தேர்தல் செயல்முறையில் அனைத்து அரசு ஊழியர்களும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
எந்தவித அலட்சியமும் அனுமதிக்கப்படாது என்றும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 80,000 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் 61,000 வாக்குச்சாவடிகள் கிராமப்புற பகுதிகளில் அமைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
வாக்களிப்பு செயல்முறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் 100 சதவீத இணையதள ஒளிபரப்பை தேர்தல் ஆணையம் செயல்படுத்த உள்ளது என்றும் கூறினார்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது என்றும் அது முழுமையாக நியாயமான செயல்முறை என்றும் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
