டெஹ்ரான்: ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய பெரிய தாக்குதலில், அரசு தலைவர்களின் பாதாள வளாகம் தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆசிய நாடான ஈரானுக்கும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த ஒரு வாரமாக மோதல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் உயிரிழந்த உச்ச தலைவர் கமேனி அலுவலகத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த பாதாள வளாகத்தை இஸ்ரேல் விமானப்படை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இஸ்ரேல் விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
டெஹ்ரானின் மையப்பகுதியில் கமேனி அலுவலகத்தின் கீழ் பாதாள வளாகம் அமைந்திருந்தது. போர் காலத்தில் ஈரான் தலைமை அதிகாரிகள் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க இந்த வளாகம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வளாகத்தை குறிவைத்து 50 போர் விமானங்கள் அதிகாலை நேரத்தில் தாக்குதல் நடத்தின. ராணுவ புலனாய்வு மற்றும் ‘மொசாட்’ உளவு அமைப்பின் தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையில் அந்த பாதாள வளாகம் தகர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் பெரும்பாலான ஈரான் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை தளங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
