புதுடில்லி:
மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளை கண்டித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்தின் முன்பு, திரிணமுல் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, டில்லி போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக பணிகளை செய்து வரும் ஐபேக் நிறுவன அலுவலகங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (ஜன.08) சோதனை நடத்தினர். அதேபோல், ஐபேக் நிறுவனத்தின் இயக்குநரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ஐடி விங் தலைவருமான பிரதிக் ஜெயின் வீட்டிலும் ரெய்டு நடைபெற்றது.
இந்த சோதனை நடைபெறுவதை அறிந்து, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி சம்பவ இடத்திற்கு நேரில் சென்றார். அப்போது, பிரதிக் ஜெயின் வீட்டில் இருந்த மொபைல் போன், லேப்டாப் மற்றும் சில ஆவணங்களை அவர் எடுத்துச் சென்றதாக தகவல் வெளியானது. இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை, விசாரணைக்கு தேவையான ஆதாரங்களை பறித்து இடையூறு செய்ததாக மம்தா மீது குற்றம்சாட்டியது.
இந்தச் சூழலில், அமலாக்கத்துறை சோதனைகளை அரசியல் பழிவாங்கல் என கூறி, திரிணமுல் காங்கிரஸ் எம்பிக்கள் மஹூவா மொய்த்ரா, டெரிக் ஓ பிரைன், கீர்த்தி ஆசாத், சதாப்தி ராய் உள்ளிட்டோர், அமித் ஷா இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, போலீசார் தலையிட்டு எம்பிக்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
அப்போது பேசிய மஹூவா மொய்த்ரா,
“பாஜவை நாங்கள் தோற்கடிப்போம். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிகளை டில்லி போலீசார் எப்படி நடத்துகிறார்கள் என்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது,” என்று கூறினார்.
