தூத்துக்குடி: விஜய்க்கு டான்ஸ் ஆடத் தான் தெரியும்; தலைவராக ஒன்றுமே தெரியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக முதல்வர் கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசு எதையும் வழங்கவில்லை என்று ஒருமுறையாவது கூறியிருக்கிறாரா என்று கேள்வி எழுப்பினார். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு 350 கோடி ரூபாய், திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு 650 கோடி ரூபாய், பட்ஜெட்டுக்கு முன்பு 11 வந்தே பாரத் ரயில்கள் அறிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், 11 மருத்துவக் கல்லூரிகளை இபிஎஸ் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
முதல்வர் எதற்காகவும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்களா என்றும், தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அனைத்து பொருட்களையும் மத்திய அரசு இலவசமாக வழங்கி வருவதாகவும், அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி மாநில அரசு வழங்குவதாக கூறிக் கொண்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் இருப்பதாகவும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சொத்துவரியை உயர்த்த மாட்டோம் என்று கூறிய முதல்வர், தற்போது 300 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதாகவும், மின்கட்டணமும் அதேபோல் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் கூறினார். அனைத்து வரிகளையும் உயர்த்தி விட்டு எதுவுமே தரவில்லை என்று மாநில அரசு கூறுவது தவறு என்றும் விமர்சித்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பான பட்ஜெட்டை வழங்கியுள்ளதாகவும், ஆதிச்சநல்லூரில் கலாசார மையம் அமைக்கப்படும் என்றும், மருத்துவத் துறைக்கு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒட்டுமொத்தமாக பட்ஜெட்டை படித்து பார்த்த பிறகே முதல்வர் பேச வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
என்டிஏ கூட்டணியில் பா.ஜ.க., அ.தி.மு.க., த.மா.கா உள்ளிட்ட பல கட்சிகள் இருப்பதையே தெரியாமல் பேசினால் எப்படி என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், விஜய் குறித்து பேசிய நயினார் நாகேந்திரன், விஜய்க்கு அரசியல் விஷயங்கள் எதுவும் தெரியாது என்று நினைப்பதாக கூறினார். ஒரு கட்சியின் தலைவர் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் டான்ஸ் ஆடுவது சரியா என்றும், தமிழகத்தின் கலாசாரம் என்ன என்பதே தெரியாமல் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தால், டான்ஸ் ஆடிட்டே இருக்க வேண்டியது தான் என்றும் விமர்சித்தார்.
