கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படாமல் குளறுபடி ஏற்பட்டதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு அதிருப்தி தெரிவித்துள்ளார். “ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அவமதிப்புக்கு மாநில அரசே பொறுப்பு” என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருகிறது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கும் பழங்குடியினர் சமூகத்தின் வருடாந்திர மாநாடு சிலிகுரியின் பிதான்நகரில் நேற்று நடைபெறவிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களை கூறி அந்த இடத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து பாக்தோக்ரா விமான நிலையம் அருகே உள்ள கோஷாய்பூர் பகுதியில் மாநாடு நடத்த மாநில அரசு அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் பழங்குடியினர் மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று மேற்கு வங்கம் சென்றார். சிலிகுரி மாவட்டத்தில் உள்ள பாக்தோக்ரா விமான நிலையத்தில் அவரை சிலிகுரி மேயர் கவுதம் தேப் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
ஜனாதிபதியை வரவேற்க மாநில முதல்வர் அல்லது அமைச்சர்கள் வருவது வழக்கமான நெறிமுறையாக இருந்தாலும், மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டுமே வரவேற்றது ஜனாதிபதிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
பின்னர் அனுமதி வழங்கப்பட்ட கோஷாய்பூர் பகுதிக்கு சென்ற ஜனாதிபதி முர்மு, பழங்குடியினர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் குறைந்த அளவிலான பொதுமக்கள் மற்றும் பழங்குடியினர் பங்கேற்றது ஜனாதிபதிக்கு ஏமாற்றத்தை அளித்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்ட பிதான்நகர் பகுதியில் பழங்குடியினர் மத்தியில் ஜனாதிபதி முர்மு உரையாடினார்.
அப்போது அவர் பேசுகையில், “நானும் மேற்கு வங்கத்தின் மகள்தான். இங்கு ஆட்சி செய்யும் முதல்வர் மம்தா பானர்ஜி எனக்கு இளைய சகோதரி போன்றவர். அவர் வருத்தமாக இருக்கிறாரா என தெரியவில்லை. எப்படியிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. நீங்கள் அனைவரும் நலமாக இருங்கள்,” என்றார்.
பிதான்நகர் பகுதியில் பழங்குடியினர் மாநாடு நடைபெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றும், அங்கு சுமார் 5 லட்சம் பேர் வரை கூடும் வசதி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த இடத்தில் கூட்டம் நடத்த மாநில அரசு அனுமதி அளிக்காதது ஏன் என்பது தெரியவில்லை என்றும் கூறினார்.
கோஷாய்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே இருந்ததாகவும், அங்கு நிகழ்ச்சி ஏற்பாடுகள் முறையாக செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இது பழங்குடியினர் நலனில் மாநில அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி வருவார், காலியான இடத்தில் நிகழ்ச்சி நடத்தி அவர் திரும்பிச் செல்வார் என்று மாநில அரசு அதிகாரிகள் நினைத்திருப்பார்கள் என்றும், இந்த சம்பவம் தமக்கு மனவேதனை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தனது சிலிகுரி பயணத்தின் போது நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு பணிகளில் பல குளறுபடிகள் நடந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்க அரசை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறியதாவது:
“சந்தாலி கலாசாரம் போன்ற முக்கியமான நிகழ்வை மேற்கு வங்க அரசு அலட்சியமாக கையாள்ந்தது துரதிர்ஷ்டவசமானது. இது வெட்கக்கேடான சம்பவமாகும். பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த ஜனாதிபதி முர்மு வெளிப்படுத்திய வேதனை நாட்டு மக்களின் மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க அரசு அனைத்து எல்லைகளையும் மீறியுள்ளது. ஜனாதிபதிக்கு ஏற்பட்ட இந்த அவமதிப்புக்கு மாநில நிர்வாகமே பொறுப்பு.
ஜனாதிபதி பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது. அந்த பதவியின் கண்ணியம் எப்போதும் மதிக்கப்பட வேண்டும். மேற்கு வங்க அரசுக்கு இனியாவது நல்ல புத்தி வரட்டும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதே விவகாரம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “மேற்கு வங்க அரசை இழிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி முர்முவை பாஜ பயன்படுத்துகிறது. சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜ தூண்டுதலின் பேரில் ஜனாதிபதி அரசியல் செய்கிறார்.
பாஜ ஆளும் மாநிலங்களில் பழங்குடியினரின் உரிமைகள் பறிக்கப்பட்டபோது ஜனாதிபதி அமைதியாக இருந்தது ஏன்? மணிப்பூரில் பழங்குடியினர் சித்ரவதை செய்யப்பட்டபோது மவுனமாக இருந்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
