புதுடில்லி: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் மோதல் தொடர்பான செய்திகளை சில டிவி சேனல்கள் அச்சமூட்டும் வகையில் ஒளிபரப்பி வருவதால், டிஆர்பி எனப்படும் டிவி ரேட்டிங் பாயின்ட்ஸ் முறையை தற்காலிகமாக நிறுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தொடர்பாக சில குறிப்பிட்ட டிவி செய்தி சேனல்கள் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக அச்சமூட்டும் செய்திகள் மற்றும் காட்சிகளை ஒளிபரப்பி வருவது அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
இத்தகைய செய்தி ஒளிபரப்புகள், மோதல் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் தேவையற்ற பீதியை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, டிஆர்பி எனப்படும் டிவி ரேட்டிங் பாயின்ட்ஸ் முறையை அடுத்த 4 வாரங்கள் அல்லது அடுத்த உத்தரவு வெளியாகும் வரை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
