புதுடில்லி: துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன அதிகாரத்தை, கவர்னரிடம் இருந்து பறித்து, தமிழக அரசே நியமிக்கும் வகையில் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி, விபுல் பான்ஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மேலும், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “சென்னை உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு, இந்த சட்டங்களை தடுத்து நிறுத்த அவசரமாக ஏன் செயல்பட்டது?” என்று கேள்வி எழுப்பினர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:
தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு, மாநில அரசுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த காரணத்தினாலேயே, இடைக்கால தடை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், புதிய விசாரணைக்காக இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பப்படுகிறது.
இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அல்லது ஏதேனும் பொருத்தமான அமர்வு முன்பு பட்டியலிடப்பட வேண்டும். ஆறு வாரங்களுக்குள் வழக்கின் விசாரணை முடிக்கப்பட வேண்டும்.
வழக்கின் விசாரணை நிறைவு பெறும் வரை, புதிய துணைவேந்தர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்ற தமிழக அரசின் உறுதிமொழியையும் பதிவு செய்கிறோம். மேலும், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தெரிவித்திருந்த கருத்துகளையும் ரத்து செய்கிறோம்.
இவ்வாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
