சென்னை: உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கோயம்பேட்டில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
உதவித்தொகையை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும், டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், அரசு விழிப்புணர்வு பதாகைகளில் சைகை மொழி குறியீட்டை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
நேற்று இரவு நடைபெற்ற போராட்டத்தின் போது, மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டு பஸ்சில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், ஏற்றி இறக்கி அலைக்கழிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஜான்சி ராணி காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தங்கள் கோரிக்கைகளை ஏற்காத அரசை கண்டித்தும், கைது நடவடிக்கையை எதிர்த்தும் இன்று மாற்றுத்திறனாளிகள் கோயம்பேட்டில் பிரதான சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
சட்டசபை கூட்டம் நடைபெறும் நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதல்வரின் நேரடி பொறுப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட அறிக்கையில், மாற்றுத்திறனாளிகள் மீது போலீசார் நடத்தியதாக கூறப்படும் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
