2026 டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை இழந்திருந்தாலும், தனது கடைசி லீக் ஆட்டத்தில் கனடா அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், இப்ராகிம் சத்ரான் மற்றும் முகமது நபி சிறப்பான ஆட்டம் காட்டினர்.
டாஸ் வென்ற கனடா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணிக்குத் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். குல்பதின் நைப் 1 ரன்னில் வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய இப்ராகிம் சத்ரான், கனடா பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவருக்கு துணையாக சேடிக்வல்லா அட்டல் 44 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் நிலைத்து நின்ற சத்ரான், 56 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 95 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. கனடா தரப்பில் ஜஸ்கரன் சிங் 3 விக்கெட் கைப்பற்றினார்.
201 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கனடா அணி, ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் தடுமாறியது. முகமது நபி 4 ஓவர்களில் வெறும் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ரஷீத் கான் 2 விக்கெட் கைப்பற்றினார். கனடா அணியில் ஹர்ஷ் தாக்கர் 30 ரன்கள், சாத் பின் ஜாபர் 28 ரன்கள் எடுத்தனர்.
இறுதியில் கனடா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. ஏற்கனவே நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில், இந்த வெற்றி ஆப்கானிஸ்தானுக்கு ஆறுதலாக அமைந்தது.
