சுசீந்திரம் தேரோட்டத்தில் கோஷங்கள்; அமைச்சர் சேகர்பாபு–பக்தர்கள் இடையே வாக்குவாதம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தாணுமாமலையர் சுவாமி கோயில் தேரோட்ட நிகழ்ச்சிக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தாமதமாக வந்ததால், பக்தர்களுக்கும் அமைச்சருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மார்கழி திருவிழாவின் தேரோட்டம் காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், ஏராளமான பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்திலேயே கோயிலில் கூடியிருந்தனர். ஆனால் சுவாமி தேரில் எழுந்தருளுவதில் தாமதம் ஏற்பட்டதால் பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. அமைச்சர் சேகர்பாபு வருகை தாமதமான காரணத்தால் தேவசம் அதிகாரிகள் சுவாமி வாகனத்தை எடுக்க தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் ஒருவழியாக வாகனம் புறப்பட்டு கோயிலை வலம் வந்த பின், சுவாமி தேரில் எழுந்தருளினார்.
சுமார் காலை 10 மணியளவில் அமைச்சர் சேகர்பாபு குடும்பத்தினருடன் வந்த நிலையில், அவருக்காக தேர் வடம் பிடிப்பதை தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த சில பக்தர்கள்,
‘பாரத் மாதா கீ ஜே, ஓம் காளி, ஜெய் காளி, திருப்பரங்குன்றம் முருகா, வீர சாவர்கர் வாழ்க, சிவாஜி வாழ்க’ என கோஷங்களை எழுப்பினர்.
இதற்கு ஆத்திரமடைந்த அமைச்சர் சேகர்பாபு, “கோயிலில் போடவேண்டிய கோஷம் மட்டும் தான் போட வேண்டும். தேவையில்லாத கோஷங்கள் போடக்கூடாது” என கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் மேலும் பலத்த கோஷங்களை எழுப்பினர். இதைக் கண்ட அமைச்சர், “நீங்கள் எல்லாம் சோறு சாப்பிடுகிறீர்களா, வேறு ஏதாவது சாப்பிடுகிறீர்களா” என கேள்வி எழுப்பியதால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், அமைச்சருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கோஷங்கள் எழுந்தன. அப்போது தெப்பக்குளம் சீரமைப்பு பணிகளை வந்து பார்வையிட வேண்டும் என அப்பகுதியினர் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தற்போது நேரம் இல்லை என அமைச்சர் அந்த கோரிக்கையை நிராகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் மேலும் கோபமடைந்தனர்.
இதற்கிடையே, உள்ளூர் அமைச்சர் மனோ தங்கராஜ், அங்கு நின்றிருந்த பா.ஜ. ஆதரவாளர்கள் சிலரிடம், “வீர சாவர்க்கர் கொலை வழக்கில் எத்தனையாவது குற்றவாளி என்று தெரியுமா” என கேட்டதாக கூறப்பட்டதால் மீண்டும் சர்ச்சை எழுந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மனோ தங்கராஜ், “வரும் தேர்தலில் மதத்தை முன்னிறுத்தி வாக்குகளை சேகரிப்பதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்” என குற்றம்சாட்டினார்.
மேலும், தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு அச்சிட முடியாத வார்த்தைகளால் அர்ச்சித்ததுடன், “ஒற்றைக்கு ஒற்றை வாருங்கள் பார்க்கலாம்” என பேசியதாக கூறப்படுவது, பக்தர்கள் மத்தியில் கடும் சர்ச்சையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த களேபரங்களுக்கு மத்தியில், நேற்று காலை 10 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் என மூன்று தேர்கள் வீதி உலா வந்தன. தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு வாரிய தலைவர் சுரேஷ் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேற்றிரவு 12 மணிக்கு சப்தாவரணம் நடைபெற்ற நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்றனர். விழா நிறைவு நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனம், மாலை 5 மணிக்கு நடராஜமூர்த்தி வீதி உலா, இரவு 9 மணிக்கு ஆராட்டு நடைபெற உள்ளது.
