சிரியாவின் ஹோம்ஸ் நகரில் உள்ள இமாம் அலி பின் அபி தாலிப் மசூதியில், இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகையின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும், 18 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசூதி, அலவைட் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வாடி அல்-தஹாப் பகுதியில் அமைந்துள்ளது.
மசூதிக்குள் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிரியா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும், சம்பவத்தைத் தொடர்ந்து மசூதியைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அலவைட் பிரிவைச் சேர்ந்த பஷர் அல்-அசாத் பதவியிலிருந்து அகற்றப்பட்டு, பெரும்பான்மை சன்னி முஸ்லிம் பிரிவினர் தலைமையிலான அரசு அமைந்த பிறகு, சிரியாவில் சிறுபான்மை சமூகங்களை குறிவைத்து பல தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில் மத்திய சிரியாவில் நடந்த தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும், ஒரு மொழிபெயர்ப்பாளரும் உயிரிழந்தனர்.
அசாத் அரசு அகற்றப்பட்டதற்குப் பிறகு வழிபாட்டுத் தலத்தில் நடைபெறும் இரண்டாவது குண்டுவெடிப்பு இதுவாகும். இதற்கு முன் கடந்த ஜூன் மாதம் டமாஸ்கஸில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
