சாக்குமூட்டையில் வீசப்பட்ட இளைஞர் சடலம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்
சென்னை அடையார் பகுதியில் கடந்த 26ம் தேதி சாலையோரத்தில் சாக்குமூட்டையில் இளைஞர் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில், போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி உள்ளன. இந்த கொலை வழக்கில் பிடிபட்ட நபர்கள் அளித்த வாக்குமூலத்தில், கொல்லப்பட்ட இளைஞரின் மனைவி மற்றும் குழந்தையும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையார் இந்திரா நகர் முதல் அவென்யூவில் உள்ள இருசக்கர வாகன ஷோரூம் அருகே, ரத்தம் சொட்டிய சாக்குமூட்டை கிடப்பதாக வந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்றனர். மூட்டையை திறந்து பார்த்தபோது, 35 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞர் தலை மற்றும் முகத்தில் வெட்டு காயங்களுடன் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இந்த வழக்கில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாக்குமூட்டையை கொண்டு வந்து வீசி சென்றது பதிவாகி இருந்தது. வாகன பதிவு எண்ணை அடிப்படையாக வைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இறந்தவரின் செல்போன் தகவல்கள் மூலம், அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த கவுரவ் குமார் என்பதும், தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி வந்ததும் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கவுரவ் குமாரின் மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தை காணாமல் போயிருப்பது தெரியவந்தது.
சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட்ட நபர்கள், மனைவியும் குழந்தையும் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அடையாறு கெனால் ரோடு, கூவம் ஆற்றங்கரை, பெருங்குடி குப்பை கிடங்கு உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் இரண்டு வயது குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், மனைவியின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
