நியூயார்க்: சர்வதேச சட்டங்களை புறக்கணித்து செயல்படும் தலைவர்கள், உலகளாவிய ஒழுங்கை சீர்குலைக்கும் ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கி வருவதாக, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ஐக்கிய நாடுகள் சாசனம் என்பது சர்வதேச உறவுகளுக்கான அடித்தளம் மட்டுமல்ல; அமைதி, நிலையான வளர்ச்சி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் முக்கிய ஒப்பந்தமாகவும் விளங்குகிறது என தெரிவித்துள்ளார். ஆனால், தலைவர்கள் தங்களுக்கு விருப்பமான விதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து, சர்வதேச சட்டங்களை மீறி செயல்படும் போது, உலகளாவிய ஒழுங்கே குறைமதிப்பிற்கு உட்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சட்டங்களை மீறும் இத்தகைய நடவடிக்கைகள், எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தான முன்னுதாரணமாக மாறும் அபாயம் உள்ளதாக குட்டெரெஸ் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சில தனிநபர்கள் உலகளாவிய கருத்துக்களை திசைதிருப்பவோ, தேர்தல்களை பாதிக்கவோ அல்லது பொது விவாதங்களின் விதிகளை தீர்மானிக்கவோ கூடிய நிலை உருவாகும் போது, சமத்துவமின்மை மற்றும் சீரழிவு தவிர்க்க முடியாததாக மாறும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஐநா சாசனம் என்பது உலக நாடுகளை ஒன்றிணைக்கும் ஒரு பொது ஒப்பந்தம் என்றும், அதனை அனைத்து நாடுகளும் நேர்மையுடன் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
