மாஸ்கோ:
சர்வதேச கடல் சட்டத்தை மீறி தங்களுக்குச் சொந்தமான எண்ணெய் டேங்கர் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளதாகக் குற்றம்சாட்டிய ரஷ்யா, இதே நிலை தொடர்ந்தால் அமெரிக்க கப்பல்களை மூழ்கடிப்போம் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் அமெரிக்க நாடான **வெனிசுலா**வில் இருந்து அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கூறி, அந்நாட்டில் இருந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களை அமெரிக்க கடற்படை தடுத்து வருகிறது.
இந்த சூழலில், ரஷ்யாவுக்குச் சொந்தமான ‘பெல்லா 1’ என்ற எண்ணெய் டேங்கர் கப்பலை பறிமுதல் செய்ய அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. இதற்கு பதிலடியாக, அந்த கப்பலின் பெயரை ‘மரினேரா’ என மாற்றி, ரஷ்யக் கொடியை ஏற்றி பாதுகாப்பு வழங்கி வந்தது ரஷ்யா.
இந்நிலையில், நேற்று வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அந்த எண்ணெய் டேங்கர் கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றியுள்ளது. இந்த நடவடிக்கையை ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது. இது சர்வதேச கடல் சட்டத்தின் வெளிப்படையான மீறல் என ரஷ்ய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்சி ஜுராவ்லெவ் கூறுகையில்,
“அமெரிக்கா இதே போக்கை தொடர்ந்தால், அவர்களுக்குச் சொந்தமான கப்பல்களை மூழ்கடிக்க வேண்டும். ரஷ்யாவின் அணு ஆயுதக் கொள்கையின் அடிப்படையில் பதிலடி கொடுக்கத் தயாராக இருக்கிறோம்,” என கடுமையாக எச்சரித்துள்ளார்.
