புவனேஸ்வர்: ஒடிஷாவில் போலீசில் சரணடைய விரும்பியதாக கூறப்படும் மாவோயிஸ்ட் தளபதி அன்வேஷை, தேடப்பட்டு வந்த அமைப்பின் தலைவர் கொன்று புதைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புதைக்கப்பட்டிருந்த அன்வேஷின் உடலை போலீசார் தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தை சேர்ந்த அன்வேஷ், அண்டை மாநிலமான ஒடிஷாவில் மாவோயிஸ்ட் பகுதி கமிட்டி உறுப்பினராக செயல்பட்டார். மேலும் கலஹண்டி–கந்தமால்–பவுத் நயகர் பகுதிகளில் தளபதியாக இருந்தார்.
பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய இவரை கைது செய்ய 22 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவித்து போலீசார் தேடி வந்தனர்.
கடந்த ஜனவரி 29ஆம் தேதி அன்வேஷ் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கந்தமால் மாவட்டத்தின் தரிங்படி அருகே பகாரி வனப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த உடலை போலீசார் சட்ட நடைமுறைகளை பின்பற்றி நீதிபதி முன்னிலையில் தோண்டி எடுத்தனர். உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில், மாவோயிஸ்ட் தலைவர் சுக்ரா மற்றும் அவரது கூட்டாளிகள் சிலா, ஜாகேஷ் ஆகியோர் கடந்த மாதம் 29ஆம் தேதி அன்வேஷை கொன்று புதைத்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அன்வேஷ், மற்ற மாவோயிஸ்ட்களுடன் இணைந்து ஒடிஷா போலீசில் சரணடைய விரும்பியதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுக்ரா அவரை கொன்றதாகவும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், கடந்த 22ஆம் தேதி கந்தமால் மாவட்டத்தின் நந்தபாலி வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜாகேஷ் உயிரிழந்ததாக கந்தமால் எஸ்.பி. ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
இரு நக்சல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் இந்திராவதி ஆற்றையொட்டிய வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த நக்சல்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலடி தாக்குதலில் இரு நக்சல்கள் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கரில் இந்த ஆண்டில் மட்டும் பல்வேறு என்கவுன்டர் சம்பவங்களில் 25 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அந்த மாநிலத்தில் 285 நக்சல்கள் உயிரிழந்தனர்.
