புதுடில்லி: தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வரும் எஸ்ஐஆர் பணி மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், சட்டவிரோதமாக ஊடுருவுபவர்களை அகற்றுவது நமது பொறுப்பு என்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகிழக்கு மாநிலங்களில் தற்போது சட்டவிரோத குடியேற்றம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். ஏற்கனவே சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், வங்கதேசம் வழியாக சட்டவிரோத குடியேற்றம் நடந்ததாகவும், போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டு, அந்த நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் கிரண் ரிஜிஜூ குற்றம்சாட்டினார். இதன் மூலம், இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேற காங்கிரஸ் வழிவகை செய்ததாகவும் அவர் கூறினார்.
வாக்காளர் பட்டியலில் எந்த சட்டவிரோத குடியேறியவர்களும் இடம்பெறாததை உறுதி செய்வோம் என்றும், தேர்தல் கமிஷனின் எஸ்ஐஆர் பணி அதற்காக சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் விளக்கினார். சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதும், இந்திய மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும் அரசின் கடமையாகும் என்றும் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தினார்.
