சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்; அதிமுக-பாஜ தொகுதி பங்கீடு பேச்சு
2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக மற்றும் பாஜ இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. சென்னையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தை சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றதாகவும், அது சுமூகமாக முடிந்ததாகவும் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சரும் தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னைக்கு வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள் பூங்கொத்து வழங்கியும், சால்வை அணிவித்தும் பியூஷ் கோயலை வரவேற்றனர்.
இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற சந்திப்பில், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உடன் பியூஷ் கோயல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த ஆலோசனையில், பாஜ போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் அதிமுக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டணியை மேலும் பலப்படுத்துவது மற்றும் புதிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தரப்பும் விவாதித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக, சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜவின் மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், இணை பொறுப்பாளர் அர்ஜூன் ராம் மேக்வால், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டமும் சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது.
பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், இது முதற்கட்ட பேச்சுவார்த்தை என்றும், அது சுமூகமாக நடைபெற்றதாகவும் கூறினார்.
இதனிடையே, தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று மாலை கிண்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
