சட்டசபைத் தேர்தலுக்கான தயாரிப்பு தொடக்கம்; 11 பேர் குழுவை அறிவித்த தவெக தலைவர் விஜய்
சென்னை:
வரும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக 11 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களம் தேர்தல் பணிகளால் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில், தவெக சார்பில் தேர்தல் பணிகள் முறையாக தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாக தேர்தல் அறிக்கை தயாரிக்க இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் வெளியிட்ட அறிக்கையில், தமிழக மக்களின் முன்னேற்றம் மற்றும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு, விரிவான தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக, பொதுமக்கள், சிறு மற்றும் குறு தொழில்துறையினர், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார மற்றும் தொழில் வல்லுநர்கள், வர்த்தக சபைகள், ஊழியர் சங்கங்கள், விவசாய சங்கங்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மகளிர் மற்றும் இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள் மற்றும் தரவுகள் சேகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பெறப்படும் தரவுகளின் அடிப்படையில், தமிழக மக்களையும் மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என்றும், இந்த குழுவிற்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த குழுவில் அருண் ராஜ், பிரபாகர், ராஜ்மோகன், மயூரி, சம்பத்குமார், அருள் பிரகாசம், பரணிபாலாஜி, முகமது பர்வேஸ், பிரபு, கிறிஸ்டி பிருத்வி, தேன்மொழி பிரசன்னா, சத்யகுமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அண்மையில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு இந்த குழுவில் இடம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
