கேரள வளர்ச்சி முயற்சிகளுக்கு பலன் தென்படுகிறது: திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி பேச்சு
திருவனந்தபுரம்:
கேரளாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தற்போது நல்ல விளைவுகளை அளிக்க தொடங்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கேரளா சென்ற பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். திருவனந்தபுரத்தில் 3 அம்ரித் பாரத் ரயில்கள் உள்ளிட்ட 4 புதிய ரயில்கள் சேவையை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தாம்பரம்–திருவனந்தபுரம், நாகர்கோவில்–மங்களூரு, திருவனந்தபுரம்–சார்லப்பள்ளி ஆகிய வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
கேரளாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு எடுத்த முயற்சிகள் புதிய வேகத்தைப் பெற்றுள்ளன. இன்று முதல் மாநிலத்தின் ரயில் இணைப்பு மேலும் வலுவடைந்துள்ளது. திருவனந்தபுரத்தை நாட்டின் முக்கிய ஸ்டார்ட்அப் மையங்களில் ஒன்றாக மாற்றுவதற்காக குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருகாலத்தில் தெரு வியாபாரிகளின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. பொருட்கள் வாங்க அவர்கள் அதிக வட்டி விகிதத்தில் சிறிய தொகைகளை கடனாக பெற வேண்டிய சூழல் இருந்தது.
இந்த நிலையை மாற்ற, மத்திய அரசு முதன்முறையாக பிஎம் ஸ்வநிதி யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் லட்சக்கணக்கான தெரு வியாபாரிகள் வங்கிக் கடன்களை பெற்றனர். பலர் தங்கள் வாழ்நாளில் முதல் முறையாக கடன் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து, தெரு வியாபாரிகளுக்கென பிரத்யேக கடன் அட்டையும் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு பிஎம் ஸ்வநிதி கடன் அட்டைகள் வழங்கப்பட்டன.
வளர்ச்சியில் நகரங்களின் பங்கு
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க முழு நாடும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சியில் நகரங்கள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. கடந்த 11 ஆண்டுகளில் நகர்ப்புற உள்கட்டமைப்புக்காக மத்திய அரசு பெரும் முதலீடுகளை செய்துள்ளது. இதன் பயன் கேரளாவின் வளர்ச்சியிலும் தெளிவாக தெரிகிறது.
அரசியல் மாற்றம் குறித்த நம்பிக்கை
நான்கு தசாப்தங்களுக்கு மேலான இடதுசாரி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. வரவுள்ள கேரள சட்டசபை தேர்தலில் மாற்றம் ஏற்படும் என மக்கள் பாஜ மீது நம்பிக்கை வைத்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
1987 ஆம் ஆண்டு ஆமதாபாத் மாநகராட்சியை முதல் முறையாக பாஜ கைப்பற்றியதையும் அவர் நினைவூட்டினார். அதன் பின்னர் பல தசாப்தங்களாக குஜராத் மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
முன்மாதிரியாக மாறும் நகரம்
குஜராத்தில் ஒரு நகரத்தில் தொடங்கிய பயணம், கேரளாவிலும் ஒரு நகரத்திலிருந்து தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி கூறினார். இடதுசாரிகளும் காங்கிரசும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தவறியுள்ளதாகவும், திருவனந்தபுரத்தில் வளர்ச்சியை கொண்டு வர பாஜ பணியாற்ற தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திருவனந்தபுரம் முழு நாட்டிற்கும் ஒரு முன்மாதிரி நகரமாக மாறும் என்றும், அதை இந்தியாவின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்ற முழு ஆதரவு வழங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
வரவேற்பு உரை
பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், கடவுளின் சொந்த நாடான கேரளத்திற்கு பிரதமரை பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்பதாக தெரிவித்தார்.
மாநில வளர்ச்சிக்கு உதவும் பல திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் கேரளாவிற்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், நீண்ட காலமாக கோரப்பட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது மாநில அரசுக்கு திருப்தி அளிப்பதாகவும் கூறினார்.
நன்றியும் நம்பிக்கையும்
இந்த திட்டங்களுக்கு அனுமதி வழங்கிய பிரதமருக்கு மாநில அரசின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பினராயி விஜயன் கூறினார். மத்திய அரசின் இந்த நல்லெண்ணம் எதிர்காலத்திலும் தொடரும் என நம்பிக்கை தெரிவித்த அவர், கேரளாவின் நியாயமான கோரிக்கைகள் உரிய நேரத்தில் நிறைவேற்றப்படும் என பிரதமர் உறுதி அளிப்பார் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
