புதுடில்லி: கேரள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் மாநில தேர்தல் பிரசார குழுவின் இணைத் தலைவராக லோக்சபா எம்.பி. சசி தரூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ஆளும் கூட்டணியுடன் போட்டியிட பா.ஜ. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மாநில தேர்தல் பிரசார குழு விபரங்களை காங்கிரஸ் தலைமை வெளியிட்டது. இதில், மாநில தேர்தல் பிரசார குழு தலைவராக மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளையில், இணைத் தலைவராக சசி தரூருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, அவர் வெளியிட்ட கருத்துகள் மற்றும் கட்சி கூட்டங்களை புறக்கணித்தது காரணமாக காங்கிரஸ் தலைமையில் அதிருப்தி நிலவியது.
சமீபத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சசி தரூர் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து, மாநில காங்கிரசுடன் இணக்கமான போக்கை அவர் கடைப்பிடித்து வருகிறார்.
இதன் பின்னணியில், மாநில தேர்தல் பிரசார குழுவின் இணைத் தலைவராக சசி தரூர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், கட்சியில் அவருக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
