கேரளாவிலும் பாஜ ஆட்சி; காங்கிரஸ்–இடதுசாரிகள் வீழ்ச்சி: அமித்ஷா பேச்சு
திருவனந்தபுரம்: உலகளவில் கம்யூனிஸ்ட் இயக்கம் காணாமல் போய்விட்டதாகவும், இந்தியாவில் காங்கிரஸ் கட்சி முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜ பிரதிநிதிகளை சந்தித்த அமித்ஷா, அவர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,
“கேரளாவில் பாஜ வளர்ச்சி எளிதானது அல்ல. அதிகாரத்தில் இல்லாத நிலையிலும், கொள்கையால் ஈர்க்கப்பட்ட தொண்டர்கள் கடுமையாக உழைத்து வெற்றியை பெற்றுள்ளனர். நமது நம்பிக்கையை உடைக்க பலர் முயன்றனர். ஆனால் பாஜ தொண்டர்கள் உறுதியுடன் நின்றனர்,” என்றார்.
மேலும்,
“வளர்ந்த கேரளாவிலிருந்து தான் வளர்ந்த பாரதம் உருவாகிறது. எல்டிஎப் மற்றும் யுடிஎப் கூட்டணிகள் மேட்ச் பிக்சிங் அரசியலால் மாநிலத்தை தேக்க நிலையில் வைத்துள்ளன. ஊழலும், ஊழலாளர்களை பாதுகாப்பதும் தான் அவர்களின் அடிப்படை கொள்கை,” என விமர்சித்தார்.
அசாமில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜ ஆட்சி அமைக்கும் என்றும், அதேபோல் எதிர்காலத்தில் கேரளாவிலும் பாஜ ஆட்சி அமைத்து, பாஜவை சேர்ந்த முதல்வரை உருவாக்குவதே இலக்கு என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
“முத்தலாக் சட்டம், வக்ப் மசோதா ஆகியவற்றை இடதுசாரிகளும் காங்கிரசும் எதிர்த்தன. திருப்திப்படுத்தும் அரசியலை இவ்விரு கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மறைந்துள்ளன. இந்தியாவில் காங்கிரஸ் கட்சியும் சரிவின் கடைசி கட்டத்தில் உள்ளது,” என அவர் கூறினார்.
கேரளாவில் பாஜவின் ஓட்டு சதவீதம் 2014ல் 11 சதவீதமாக இருந்தது; 2024ல் அது 20 சதவீதமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர்,
“பிஎப்ஐ, ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற அமைப்புகளிடமிருந்து கேரளாவை பாதுகாக்க இடதுசாரிகளுக்கும் காங்கிரசுக்கும் இயலாது. ஓட்டு வங்கி அரசியல் காரணமாக அவர்கள் தோல்வியடைந்துள்ளனர். தேஜ கூட்டணி மட்டுமே கேரளாவை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்,” என்றார்.
சபரிமலையில் தங்கம் திருட்டு விவகாரம் குறித்து பேசுகையில்,
“அந்த விசாரணையை சுயாதீன அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். நேர்மையான விசாரணை நடைபெறும் வரை கிராமம் கிராமமாக பாஜ போராட்டம் நடத்தும். சபரிமலை தங்கத்தை பாதுகாக்க முடியாதவர்கள், மக்களின் நம்பிக்கையை எப்படி பாதுகாப்பார்கள்?” என கேள்வி எழுப்பினார்.
மேலும்,
“காங்கிரசை ஆட்சிக்கு கொண்டு வர இடதுசாரிகள் இதுவரை உதவி செய்தனர். இந்த முறை அது நடக்காது. மேற்கு வங்கத்திலும் பாஜ ஆட்சி அமைக்கும்,” என அமித்ஷா தெரிவித்தார்.
