‘குமரன் குன்று’ கோயில் இடிப்பு விவகாரம்: போராட்டத்தில் வன்முறை; இந்து முன்னணி தலைவர் காயம்
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த ஈட்டிவிரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராக்கியாபட்டி பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் ‘குமரன் குன்று’ என்ற முருகன் கோயிலை வருவாய்த் துறையினர் இடித்து அகற்றியதை தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 2.8 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்து, முருகர், விநாயகர், சிவலிங்கம், நந்தி உள்ளிட்ட சன்னதிகளுடன் செல்வ முத்து குமாரசாமி திருக்கோயில் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், அவிநாசி வட்டாட்சியர் சந்திரசேகர் தலைமையில் வருவாய்த் துறையினர், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் கோயிலை அகற்றினர்.
கோயில் அகற்றப்படுவதை அறிந்த இந்து முன்னணியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டு, அழுது கூச்சலிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் தள்ளுமுள்ளாக மாறியது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் உள்ளிட்டோர், கோயில் அகற்றத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சில காவல் துறையினர் சாலையோர பள்ளத்தில் விழுந்தனர். இதில் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர்கள் கிஷோர் குமார், செந்தில் குமார், பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, பெருமாநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அகற்றப்பட்ட கோயிலில் இருந்த சிலைகள் இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. காடேஸ்வரா சுப்பிரமணியம் சிகிச்சை பெற்று வரும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் திரண்டதால், அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது.
