கி.பி., 5ம் நூற்றாண்டு பாய்மரக் கப்பல்; குஜராத்–ஓமன் வரலாற்றுப் பயணம்
புதுடெல்லி:
விமானம் தாங்கிக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன கப்பல்களைக் கொண்டுள்ள இந்தியக் கப்பற்படை, தனிச்சிறப்புமிக்க புதிய பாய்மரக் கப்பலை பெற்றுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் திங்கட்கிழமை (டிசம்பர் 29) தனது முதல் கடற்பயணத்தைத் தொடங்கிய ‘ஐஎன்எஸ்வி கௌண்டின்யா’, முழுக்க முழுக்க பாரம்பரிய முறையில் கட்டப்பட்ட பாய்மரக் கப்பலாகும்.
புகழ்பெற்ற இந்திய மாலுமியான கௌண்டின்யாவின் பெயர் சூட்டப்பட்ட இந்தக் கப்பல், மரப் பலகைகளை ஆணிகள் பயன்படுத்தாமல், தேங்காய் நார் கயிறு மற்றும் இயற்கை பசைகள் மூலம் பண்டைய முறையில் வலுவாக இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் போர்பந்தரிலிருந்து ஓமானின் மஸ்கட் வரை சுமார் 1,400 கிலோ மீட்டர் தூரப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தக் கப்பல், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவை உலகத்துடன் இணைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க கடல்வழிப் பாதைகளில் பயணிக்கிறது.
இந்தக் கடற்பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த துணை அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், “இந்தப் பயணம் கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் மீண்டும் இணைக்கிறது,” என தெரிவித்தார். குஜராத்தின் மேற்கு பகுதியான போர்பந்தரிலிருந்து அரேபிய தீபகற்பத்தை நோக்கி, இரண்டு வாரங்களில் இந்தப் பயணம் நிறைவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், “வணிகம், கடற்பயணம் மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்தின் பண்டைய பாதைகளில் மீண்டும் பயணிப்பதன் மூலம், இந்தியப் பெருங்கடல் முழுவதும் இயற்கையான கடல்சார் பாலமாக இந்தியாவின் நிலையை உறுதிப்படுத்துகிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தப் பயணம், இந்திய மாலுமிகள் ரோமானியப் பேரரசு, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் கிழக்காசிய நாடுகளான தாய்லாந்து, இந்தோனீசியா, சீனா, ஜப்பான் வரை வழக்கமான வணிகர்களாக பயணித்த காலத்தை நினைவூட்டுவதாகவும் கூறினார்.
பண்டைய இந்திய கடல்சார் உத்திகள் மற்றும் திறன்களை மீட்டெடுத்து புதுப்பிப்பதே இந்த முயற்சியின் நோக்கம் என்றும், இதனால் இந்தியாவுக்கு ஆழமான உத்திபூர்வ மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் கிடைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பயணம் சவால்மிக்கதாக இருப்பதாகவும், கப்பலை உருவாக்கிய கலைஞர்கள் இந்திய மாலுமிகள் பயன்படுத்திய பாரம்பரிய கப்பல் கட்டும் முறைகளையே பின்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 பேர் கொண்ட கப்பல் குழுவினர், ஏற்கெனவே கர்நாடகாவில் இருந்து குஜராத் வரை இந்தியாவின் பனைமரங்கள் நிறைந்த கடற்கரையோரமாக வடக்கு நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர்.
