புதுடில்லி: காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை பிரேசில் வன்மையாகக் கண்டிக்கிறது என, இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தியா பயணத்தின் போது, டில்லியில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் பிரேசில் அதிபர் பங்கேற்றார். பின்னர், ஐதராபாத் இல்லத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை 20 பில்லியன் டாலர்களுக்கு மேல் உயர்த்த உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேசில் அதிபர், “காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். பயங்கரவாதம் என்பது எந்த ஒரு மதத்துடனோ, நாட்டுடனோ தொடர்புடையது அல்ல,” என்றார்.
இந்தியா – பிரேசில் உறவுகள் வலுப்பெற்று வருவதாக பிரதமர் மோடி பாராட்டினார்.
